ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கடற்கரைப் பகுதியில் மட்டும் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பைக், கார் பந்தயங்களைத் தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய், எம்.சி.சாரங்கன், எச்.எம்.ஜெயராம், எம்.டி.கணேசமூர்த்தி மற்றும் 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் மெரினா, சாந்தோம், எலியட்ஸ், மற்றும் நீலாகங்கரை ஆகிய கடற்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இங்கு மணல் பரப்பில் செல்லும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
போதையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிந்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போதை தெளிந்த பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களைக் கிண்டல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் கேட்டபோது, “கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 30 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் நடக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார். இதேபோல் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கிளப்பு களுக்கும் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.