மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்..!!
காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் இறப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ரவி(53). ஜமுனாமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணிக்காக ஜமுனாமத்தூரில் உள்ள சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜமுனாமத்தூர் காவல் நிலையத்திர்க்கு அருகில் உள்ள காவலர் குடியிருப்பிற்கு சென்றவர் ஒருநாளுக்கு மேல் ஆகியும் வெளியில் வராததால் கண்ணமங்கலத்தில் உள்ள அவரது மனைவி சுமதி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலை அடுத்து விரைந்து வந்த உறவினர்கள் பார்க்கும் போது எஸ்.எஸ்.ஐ ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில் ரவி பணியில் இருக்கும் போது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் 2 நாள் விடுமுறை கேட்டுள்ளார், அதை அதிகாரிகள் கொடுக்க மறுத்ததால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அதேபோல் இவர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போது பெண் ஒருவர் இவர் மீது புகார் கொடுத்ததாகவும் அதற்காக விசாரிக்க வேண்டும் என அழைத்ததால் மனம் நொந்து காணப்பட்டுள்ளார். நான் சாகப்போகிறன் என போலீசாரிடம் அவர் கூறியும் அதை காவல் துறையினர் கண்டுக்கொள்ளவில்லை. நான் அங்குள்ள போலீசுக்கு போன் செய்து எனது கணவருக்கு என்ன ஆனது என கூறுங்கள் என கூறியதற்கு நாங்கள் என்ன உங்க வீட்டு வேலைக்காரர்களா? என சொல்லிவிட்டார்கள். பின்னர் அங்குச் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்தார். அதனால் அவரது இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து போளூர் டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து SSI ரவி உடலை பெற்று சென்றனர்.
இது குறித்து போளூர் டிஎஸ்பி குணசேகரனிடம் கேட்ட போது “நேற்று காலை எஸ்.எஸ்.ஐ ரவி காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவர் பணியில் இந்த போது பெண் ஒருவரின் வாகனத்தை சேதப்படுத்தியதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே அவரை விசாரிக்க முதலில் எஸ்.பி அலுவலகத்திர்க்கு அழைத்தோம். அவர் வர மறுத்ததால் பின்னர் டிஎஸ்பி அலுவலகத்திர்க்கு அழைத்தோம். முதலில் வருவதாக சொன்னவர் பின்னர் வரவில்லை.
இதனால் அவரது மனைவிக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தோம். அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தாமதமாக வந்துள்ளனர், இவர் எஸ்.எஸ்.ஐ.யாக இருந்து எஸ்.ஐ.ஆக பதவி உயர்வு பெற இருந்தவர், இதற்காக வரும் 15-ம் தேதி பயிற்ச்சிக்கு செல்ல இருந்தார், அவரது உறவினர்கள் கூறுவது போல் அவருக்கு எந்த மன உழைச்சலும் தரவில்லை, பணியும் ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வழங்கப்பட்டது, அவர் கேட்ட 10 நாள் விடுமுறையை கூட அளித்து விட்டோம்” எனக் கூறினார்.
மேலும் இறப்பதர்க்கு முன் எஸ்.எஸ்.ஐ ரவி மற்றோரு காவலருடன் பேசும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. அதில் “நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் எனக்கு 10 நாட்கள் விடுமுறை வேண்டும், அதேபோல் சோதனைச்சாவடியில் நான் முகக்கவசங்களை மட்டுமே வழங்கி வந்தேன். எந்த பிரச்னையும் செய்யவில்லை, என்னை ஏன் டிஎஸ்பி அழைக்கிறார், நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளபோகிறேன், எனது பிணத்தை கொண்டு போய் டிஎஸ்பியிடம் கொடுங்கள்” என பேசியுள்ளார், இது குறித்து மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.