திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், பொதுமக்கள் நேரடியாக தகவல் தருவதற்கு ஏதுவாகவும் திருவள்ளூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் இயக்கி தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக தகவல் தருவதற்கு ‘ஹலோ போலீஸ்’ என்ற சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, சூதாட்டம், போலி மதுபானங்கள் விற்பனை, மணல் கொள்ளை மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கலாம்
மேற்கண்ட குற்றங்களை பற்றி பொதுமக்கள் யாரேனும் புகார் அளிக்க விரும்பினால் 9003390050 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரத்யேகமாக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிற்கு வரும் புகார்கள் மீது சிறப்பு குழு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் அதிக அளவில் இந்த சேவையை பயன்படுத்தி குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உதவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்