ஏரல் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சம்படி மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி செங்கமலம் (வயது 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்ததால், செங்கமலத்துக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் 2 மகள்களும் உறவினர்களின் வீட்டில் வசித்தனர். செங்கமலத்துடன் மகன் மட்டும் வசித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு செங்கமலம் வழக்கம்போல் வீட்டில் மகனுடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த 2 பேர் செங்கமலத்தை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது தலையில் செங்கற்களால் தாக்கி கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை வீட்டின் அருகில் உள்ள புதர் செடிகளுக்கு இடையே வீசிச் சென்றனர்.
இந்த கொலை குறித்து, ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலை தொடர்பாக சம்படி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (29), சந்தனமகராஜன் (20) ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
