கன்னியாகுமரி: கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக அடிக்கடி கடல் பகுதியில் கண்காணிப்பு நடத்தபட்டு வருகிறது.
அதன்படி நேற்று கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சவுகாஜ் ஆபரேஷன் என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வருகிற 19-ந்தேதி மதியம் 12 மணி வரை நடைபெறும். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சென்னை வருகையை முன்னிட்டு இந்த சோதனைகள் செய்யபட்டது.
கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு சொந்தமான 2 அதிநவீன படகுகள் மூலம் கடல் பகுதியை தீவிரமாக கண்காணித்தனர். இதில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சைரஸ் மற்றும் காவல்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒரு படகில் சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் வரையிலும், மற்றொரு படகில் சின்னமுட்டம் முதல் முட்டம் வரை கடல் பகுதிகளில் ரோந்துசென்று கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு சொந்தமான சோதனைச்சாவடிகள் உள்ள மகாதானபுரம், சின்னமுட்டம், குளச்சல், தேங்காபட்டணம், பஞ்சலிங்கபுரம் உள்பட 11 இடங்களில் தீவிர கண்காணிப்பும், வாகன சோதனையும் மேற்கொள்ளபட்டுள்ளது.