Police Department News

கொரோனா பாதிப்பு குறையாததால் கட்டுப்பாடுகள்: ‘வேடம் அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வர வேண்டாம்’

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், உடன்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற தசரா குழுவினர், பொதுமக்கள் பேசுகையில், ‘1, 10, 11-ம் திருவிழா நாட்களில் காளி வேடம் அணிந்த பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்‘ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-

முககவசம் கட்டாயம்

கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தசரா திருவிழாவுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி உள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையெனில், வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள். இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

வேடம் அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வர வேண்டாம். பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். தசரா குழுவினர் உள்ளூர்களிலேயே கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்தி தசரா திருவிழாவை கொண்டாடுங்கள். மேற்கத்திய நடனம், ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். கொரோனா தொற்று குறைந்த பின்னர் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் தசரா திருவிழாவை சிறப்பாக கொண்டாடலாம்.

நடவடிக்கை

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களை மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விழாவில் பக்தர்களின் கூட்டத்தை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா, பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், மாவட்ட சேவாபாரதி தலைவர் கிருஷ்ணமந்திரம், மாதவன்குறிச்சி தசரா குழு தலைவர் கருப்பசாமி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுடலைமுத்து, இந்து மகாசபா மாநில செயலாளர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் பாலன், ஜெய் சிவசேனா மாநில அமைப்பாளர் சசிகுமார் மற்றும் தசரா குழு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.