14 மணி நேரத்தில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
04:11:2020 தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்திருப்பரையில் உள்ள ஒரு டீக்கடையில், ஆழ்வார்திருநகரி தெற்கு கோட்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் இராமையா தாஸ் வயது (52) என்பவர் நேற்று (03.11.2020) காலை மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 காவல் தனிப்படைகள் அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி காவல் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், கொலையான ராமையா தாஸ் தனது வயலில் உளுந்து பயிரிட்டுள்ளார். அந்த வயலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்திருப்பேரை, யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி வயது (49) என்பவரது ஆடு, மாடுகள் மேய்ந்து வயலை சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து ராமையாதாஸ், மாரியிடம் சத்தம் போட்டு, வயல் சேதமடைந்ததுக்கு நஷ்டஈடு கேட்டதில் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் ராமையாதாஸ் (03.11.2020) அன்று தென்திருப்பேரையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும்போது தென்திருப்பேரை, யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி வயது(49), அவரது மகன்கள் இசக்கி, செல்வம் வயது(21), உறவினர்களான அதே பகுதியைச் சேர்நத பேச்சிமுத்து மகன் கசமுத்து வயது (66), செல்லத்துரை மகன் சுந்தர் வயது(42), மாரியின் மனைவி சரஸ்வதி வயது (50) ஆகியோர் ராமையாதாஸை அரிவாளால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி 6 எதிரிகளையும் நேற்று (03.11.2020) தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். 14 மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.