தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்போரூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அப்புமுருகன்(26) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி(35).
இவருக்கும் திருப்போரூரை அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கருத்துவேறு பாடு காரணமாக கணவர் செல்வத்தை துளசி பிரிந்து சென்று, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி யபடியே வரதராஜபுரம் பகுதி யில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
கழுத்து அறுத்து கொலை
இந்நிலையில் துளசி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரதராஜபுரம் பகுதியில் ஒரு வீட்டின் முன்புறம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸார் கொலைசெய்யப்பட்ட துளசியின் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் துளசியின் கொலை வழக்கு தொடர்பாக கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பு முருகன் (26) என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து போலீஸார் விசாரித்ததில், அப்பு முருகனுக்கும் துளசிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அப்பு முருகனிடம் துளசி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பு முருகன் துளசியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்புமுருகனை கைது செய்த மணிமங்கலம் போலீஸார் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அப்பு முருகன் பாஜகவின் திருப்போரூர் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.