மணல் அள்ளிய மாட்டு வண்டியை ஓட்டி சென்ற காவலர்!
திருவள்ளூர் அருகே மணல் கொள்ளையர்கள் விட்டு சென்ற மாட்டு வண்டியை போலீஸார் ஓட்டி சென்றதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ராமதண்டலம் கிராமத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் ஆற்றில் மண் அள்ளாதீர்கள் என்று போலீஸார் பல முறை எச்சரித்தும் பலன் இல்லை.
இந்த நிலையில், பட்டப்பகலில் ஆற்றில் மண் அள்ளப்படுவதாக புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
அதனையடுத்துதொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்ட புல்லரம்பாக்கம் காவல்துறையினர் ஆற்றின் கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால், சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த மாட்டு வண்டியையும் மாடுகளையும் கை விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பொதுவாக, மாட்டு வண்டிகளை ஓட்டத் தெரியாது என்பதால் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு சென்று விடுவார்கள்.
ஆனால், இந்த முறை போலீஸாரே மாட்டு வண்டிகளை காவல் நிலையத் ஓட்டி செல்ல தொடங்கினர்.
கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவு காவலர் ஒருவர் மாட்டு வண்டியை சீருடையுடன் ஓட்டி சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தார்கள்.
இந்த நிகழ்வை பலரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
