கிராம விழிப்புணர்வு காவலர்கள்(VVPO) மூலம் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை-தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் உட்கோட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஆகியோர்களுக்கு குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரிகளும் மற்றும் அந்த கிராம முக்கியஸ்தர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துக்கூறினார்.
அதில் அந்தந்த கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரிகள் அந்தந்த கிராமங்களுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள ஊர் முக்கியஸ்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அந்த கிராமத்தில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் சட்டவிரோத செயல்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் செய்பவர்கள், திருட்டு குற்றங்கள் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்கள், போதை
பொருட்கள், மதுபானம் மற்றும் கஞ்சா பதுக்கும் நபர்கள், விற்பனை செய்பவர்கள் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களையும் மேற்படி முக்கியஸ்தர்கள் மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், தகவல்கள் கொடுப்பவர்களை தொடர்பு வைத்து தகவல்களை சேகரிப்பதற்கு வாட்ஸ்அப் மூலமாக குழுக்கள் அமைத்து அதன்மூலம் தகவல்கள் சேகரித்து அந்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றும்,
அவ்வாறான தகவல்களை கிராம விழிப்புணர்வு காவலர்களுக்கு கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உரிய தகவல் கொடுக்கும் பட்சத்தில் அந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் மேற்படி குற்ற செயல்கள் சமுதாயத்தில் முற்றிலும் தடுக்கப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நல்ல உறவு ஏற்பட்டு சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் என்றும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
