Police Department News

தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் அதிக நபர்கள் தங்கக்கூடாது. சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் உடனே அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்களோ, அரசியல் கட்சியினரோ கூட்டமாக திரண்டு வந்தால் அதுபற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் விவரம் குறித்து தினமும் இரவு 7 மணிக்குள் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் அரசியல் கட்சியினர் யாரேனும் பணம் பட்டுவாடா செய்கிறார்களா எனவும் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமுருகன், ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, பாஸ்கர், பாலசிங்கம் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தங்கும் விடுதிகளில் உள்ள பதிவேடுகளில் புதியதாக அறை எடுத்து தங்கியுள்ளவர்களின் விவரம் அடங்கிய பட்டியல்களை போலீசார் ஆய்வு செய்ததோடு அவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பப்படுகிறதா என்றும் தங்கும் விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறினால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.