மாமியார், மருமகளை கொன்ற கொலைகும்பல் 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் சோதனையில் சிக்கியது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது மனைவி ராஜகுமாரி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
கணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது குழந்தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் ராஜகுமாரி, மருமகள் சினேகா, 7 மாத குழந்தை ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளை கும்பல் வீட்டுக்கதவை உடைத்து திருட முயன்றனர்.
சத்தம் கேட்டு எழுந்த ராஜகுமாரி, கொள்ளையை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராஜகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது.
இதை பார்த்த மருமகள் சினேகாவும் கூச்சலிட முயன்றார். அவரையும் அந்த கும்பல் சுத்தியலால் தாக்கி கொலை செய்தது. பின்னர் குழந்தையை மட்டும் விட்டுவிட்டு, வீட்டில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்து கொண்டு அந்த கும்பல் தப்பியது.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த கொலை குறித்து காளையார்கோவில் போலீசாரும் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலையட்டி சிவகங்கை மாவட்டம், முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று காளையார் கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது ஆயுதங்கள் இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் பட்டுக்கோட்டை ஆற்றாங்கரையை சேர்ந்த முத்து முருகன் (வயது 42) என்பது தெரியவந்தது.
எதற்காக சிவகங்கையில் சுற்றிதிரிவது என கேட்டபோது உரிய பதில் இல்லை. இதையடுத்து உயர் அதிகாரிகள் முத்து முருகனிடம் சிறப்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜூலை மாதம் முடுக்கூரணியில் மாமியார், மருமகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது தானும், தன் கூட்டாளிகளும் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து முத்து முருகன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் அரண்மனை புதூரை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்லமுத்து (26), தூத்துக் குடி மாவட்டம், நாசரேத்தை சேர்ந்த பூச்சிக்கண்ணன் (26), காளையார் கோவில் பெரிய கண்ணனூரை சேர்ந்த வேணுகோபால் (46), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ராஜகோபால கிருஷ்ணன் (33), பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த முகேஷ்ராஜா (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதில் வேணுகோபாலின் தம்பி ராஜசேகர் என்பவரும் ஈடுபட்டு உள்ளார். ஆனால் அவர் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை போலீசார் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
கைதான கும்பல், கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். பூட்டியிருக்கும் வீடு, முதியவர்கள், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இந்த கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. நகை, பணத்தை கொள்ளையடிக்க சென்ற இடத்தில் கூச்சலிட்டு தடுக்க முயன்றதால் ராஜகுமாரி, அவரது மருமகள் சினேகாவை இந்த கும்பல் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
கைதான கும்பலிடம் இருந்து நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் எந்தெந்த இடத்தில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
