இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 188 வது பிரிவு ஒரு பொது ஊழியர் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பது குற்றம் என்பது குறித்து தெளிவாக விளக்கம்
பொது ஊழியர்கள் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பதும் குற்றமாகும் . ஒருவரை , ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் அவர் அந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது .
அதேபோல் நம் வசம் உள்ள ஒரு சொத்தைப்பற்றி ஓர் உத்தரவு போடப்பட்டால் , அந்த உத்தரவின்படி நாம் நடக்கக்கட்டுப்பட்டவர்களாவோம் . அத்தகைய உத்தரவை மீறுவதால் பிறருக்குத் தொல்லை விளைந்தால் அது குற்றமாகும் .
அதற்கு ஒரு மாதம் வரை வெறுங்காவல் அல்லது இருநூறு ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் .
அத்தகைய உத்தரவைப் புறக்கணிப்பதால் மனித உயிருக்கு அல்லது சுகாதாரத்துக்குக் கேடு விளைந்தால் அல்லது அதன் விளைவாகக் கலகம் நடைபெற்றால் , 6-மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் .
விளக்கம் : குற்றவாளி பிறருக்குத் தீங்கு உண்டாக்க வேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாம் அல்லது அந்த உத்தரவைப் புறக்கணிப்பதன் மூலம் பிறருக்குத் தீங்கு நேரிட வேண்டும் என்று எண்ணாமலும் இருக்கலாம் .
உத்தரவை மீறுவதால் தீங்கு விளையும் என்று உணர்ந்தாலே போதும் . அவன் குற்றவாளி யாகிவிடுகிறான் .
உதாரணம்
ஒரு குறிப்பிட்ட தெருவின் வழியாக , மத சம்பந்தமான ஓர் ஊர்வலம் செல்லக்கூடாது என்ற பிரகடனத்தை , ஒரு பொது ஊழியர் செய்திருக்கிறார் . அந்த உத்தரவைப் பெரியசாமி மீறுவதால் . கலகத்தை உண்டாக்குகிறார் . பெரியசாமி இந்தப் பிரிவின் கீழ்க் குற்றவாளியாகிறார் .