Police Department News

சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் புதிய நடைமுறை உயர் நீதிமன்றம் உத்தரவு* .

*சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் புதிய நடைமுறை உயர் நீதிமன்றம் உத்தரவு*
.
சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் நிர்வாக நடுவர்களான தாசில்தார்களிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில்தான் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சந்தேக மரணங்கள் தொடர்பாக போலீஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர். இப்பிரிவின் கீழ் சிவகங்கை மாவட்டம் பூவந்தி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் தாலுகா ஆகிய காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக்கோரி முறையே மனோகரி, சலோமிமேரி, கவுசல்யா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, மனுதாரர்களின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிக்கப்பட்டு நிர்வாக நடுவரான தாசில்தாரிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட தாகவும் சந்தேக மரண வழக்குகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றவியல் நடை முறைச் சட்டம் 174-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குக ளில் புகாரில் முகாந்திரம் இல்லை என்று வழக்கை முடிக்கும்போது அது தொடர்பான அறிக்கையை நிர்வாக நடுவராக இருக்கும் தாசில் தாரிடம் தாக்கல் செய்யலாமா? என்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நீதிபதி கூறினார்.
அடுத்து நடைபெற்ற பல்வேறு விசாரணைகளில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, போலீஸார் வழக்கை முடித்து நிர்வாக நடுவரிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்வதில்லை. இதனால் புகார்தாரர்கள் வழக்கின் நிலை தெரியாமல் தவிக்கின்றனர். இதனால் சம்பநதப்பட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில்தான் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சந்தேக மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் வழக்கை முடிப்பதாக இருந்தாலும், விசாரணையின்போது கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தாலும் அந்த அறிக்கை களைச் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். நிர்வாக நடுவரான தாசில்தாரிடம் அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது.
இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை புகார்தாரருக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ல் பதிவு செய்யப் படும் வழக்குகளில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.