ஈட்டிய விடுப்பு சம்பளம் நிறுத்தம்.
காவல் துறையினர் கடும் அதிருப்தி
ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறுவது மேலும் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப் பட்டதால் காவல் துறையினர் கடும் அதிர்ச்சி யில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் பெறுவதை 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது காவல் துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டும் சுழற்சி முறையில் பணிக்கு வர அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர்கள் முழுமையாக வீட்டில் உள்ளனர்.அவர்களுக்கும் கொரோனா குறித்த கவலையின்றி 24 மணி நேரமும் சாலையில் நின்று பணியாற்றும் காவல்துறையினருக்கும் ஒரே நிலை என்பதை ஏற்க முடியாது.
சமீபத்தில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அறிவித்தது. ஆனால் காவல் துறையினருக்கு அறிவிக்கவில்லை. அதேநேரம் வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் விரும்பிய நாட்கள் விடுப்பு எடுக்க முடிகிறது.
அவர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு சம்பளம்பெறுவது நிறுத்தப்படுவதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் எந்த சலுகைகளும் பெறாமல் 24 மணி நேரம் பணியாற்றும் காவல் துறையினருக்கும் ஈட்டிய விடுப்பு சம்பளம் கிடையாது என்பது நியாயமல்ல.கடந்த ஆண்டும் ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்பட்டது. எங்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்காவிட்டால் மற்ற அரசு பணியாளர்களைப் போல 50 சதவீதம் பேர் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.
இல்லையெனில் விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும். அல்லது எங்களுக்கு ஈட்டிய விடுப்பு சலுகை மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.