Police Recruitment

கூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம்

வண்டலூரை அடுத்த நல்லாம்பாக்கத்தில் பாலிடெக்னிக் மாணவரை சுட்டுக்கொன்ற கொலையாளி அளித்த வாக்குமூலத்தில் கூலிப்படையில் சேர அழைத்ததாகவும் வராததால் ஆத்திரத்தில் சுட்டுக்கொன்றேன் என தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (42). இவரது மூத்த மகன் முகேஷ் (19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த விஜய்யும் முகேஷும் பால்ய நண்பர்கள். எங்கு போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள். பக்கத்துத் தெருவில் வசிக்கும் முகேஷ் எப்போதும் விஜய்யின் வீட்டில்தான் இருப்பார்.

கடந்த 5-ம் தேதி முகேஷ், நண்பர் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். இருவரும் தனியாக அறைக்குள் இருந்தபோது திடீரென விஜய் தனது பால்ய சிநேகிதன் முகேஷை சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாழாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜய்யைத் தேடி வந்தனர். கொலைக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

இதில் முக்கியமான விஷயமாக போலீஸார் பார்ப்பது விஜய் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பதே. துப்பாக்கி சாதாரணமாக ஒரு இளைஞர் கையில் உள்ளது என்றால் அதன் பின் இருக்கும் கும்பல் யார் என போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இரவு முழுவதும் தனிப்படையினர் விஜய்யைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் மறுநாள் காலையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர்முன் விஜய் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். தாழாங்குப்பம் போலீஸார் நீதிமன்ற உத்தரவு பெற்று 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதில் பல திடுக்கிடும் தகவல்களை விஜய் தெரிவித்துள்ளார். தான் போதைப் பழக்கத்துக்கு ஆளானதாகவும் அதன் காரணமாக கூலிப்படை கும்பலுடன் தனக்கு தொடர்பு கிடைத்ததாகவும் அதில் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுப்பட்டு என்கிற இடத்தில் செயல்படும் செல்வம் என்பவரின் கூலிப்படையில் இணைந்தேன்.

எனக்கு துப்பாக்கி கொடுத்தார்கள், நண்பன் முகேஷையும் இணையும்படி பலமுறை வற்புறுத்திவந்தேன். நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசைக்காட்டியும் படித்து சம்பாதிக்க விரும்புவதாக சொன்ன முகேஷ் என்னையும் திருந்தி வாழச்சொல்லி வாதம் செய்தான். இதனால் ஆத்திரத்தில் சுட்டேன்.

பின்னர் தப்பி ஓடிவிட்டேன். துப்பாக்கியை கடலில் வீசி விட்டதாக சொன்னேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணையில் துப்பக்கியை வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் பகுதியில் உள்ள விஜய்குமார் என்கிற நண்பர் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக கூறியதை தொடர்ந்து தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கூலிப்படைத்தலைவன் செல்வம் குறித்து விஜய் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் செல்வத்தை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் தேடுவதை அறிந்த கூலிப்படைத்தலைவன் செல்வம் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீஸார் விசாரிக்க உள்ளனர்.

விஜய்யின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர். பின்னர் மேலும் சில நாட்கள் போலீஸ் காவல் கேட்க உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கூலிப்படைத்தொழில் குடிசைத்தொழில்போன்று வேகமாக வளர்வதும், கஞ்சாவும், மிரட்டி பணம் பறிப்பதும் அதற்கு உதவும் வகையில் வளர்வதை போலீஸார் களையெடுக்காவிட்டால் தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் மாவட்டமாக மாற வாய்ப்புண்டு.

Leave a Reply

Your email address will not be published.