மதுரை மாநகரில் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் கைது! அவர்களிடமிருந்து சுமார் ரூபாய். 24 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீட்பு!
மதுரை மாநகரில் W1, திருநகர், C2, சுப்பிரமணியபுரம், C3, S.S.காலனி, போன்ற இடங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து அவ்வீடுகளில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த இரவு நேர களவு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் தெற்கு, மற்றும் வடக்கு ஆகியோரின் மேற்பார்வையில் தனிப்படை ஒன்று தெற்கு வாசல் சரக காவல் உதவி ஆணையர் மற்றும் கீரைத்துறை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெற்ற சம்பவ இடங்களிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள அனைத்து CCTV கேமராக்களின் பதிவுகளும் ஆராயப்பட்டன, அதில் எதிரிகள் பற்றி கிடைத்த விபரப் பதிவுகளின்படி CCTV பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் எதிரிகள் கண்டறியப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளிகள் தேனி மாவட்டம், அல்லிநகரத்தை சேர்ந்த சோனிராஜா என்ற சோனி, மற்றும் அவனது கூட்டாளி மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த பெரிய ராமு என்ற அர்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தென்பரங்குன்றத்தை சேர்ந்த சுலைமான், கின்னிமங்களத்தை சேர்ந்த அழகர்சாமி, பொம்பி நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய குற்றவாளிகளையும் திருப்பரங்குன்றம் சரக தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மேற்படி எதிரியான சோனி ராஜாவிடமிருந்து 5 இடங்களில் களவு செய்யப்பட்ட ஒரு பைக், ஒரு டிவி, மற்றும் ஆறு அரை சவரன் தங்க நகைகள், கைபற்றப்பட்டன. கூற்றவாளி சுலைமானிடமிருந்து 8 வழக்குகளில் தொடர்புடைய 32 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன, பெரியராமு என்ற அர்ஜூனனிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் கால் கிலோ வெள்ளி பொருட்கள் கைபற்றப்பட்டன.
மேலும் விசாரணையில் இதே குற்றவாளிகள் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வாகனமும், மற்றும் சின்னாளபட்டியில் கோவில் உண்டியல்களில் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகளிடமிருந்து இரவு களவு செய்ய பயன்படுத்திய கையுரைகள் மற்றும் மங்கி குல்லா ஒன்றும் எதிரிகளிடமிருந்து கைபற்றப்பட்டன. மேற்படி நான்கு எதிரிகளிடமிருந்து மொத்தம் 14 வழக்குகளில் களவு போன ரூ.22 லட்சம் மதிப்புள்ள 55 சவரன் தங்க நகைகள் , ரூ. 17,500/− மதிப்புள்ள கால் கிலோ வெள்ளி பொருட்கள் , ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு இரு சக்கர வாகனங்கள் , உண்டியல் திருட்டில் களவு போன ரூ. 42,000/− மற்றும் ரூ. 25000/− மதிப்புள்ள சோனி டிவி, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 23,84,500/− ஆகும்.
மேற்படி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குகளில் பறிபோன சுமார் ரூ. 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், மற்றும் பொருட்கள், கைபற்றிய தனிப்படை போலீசாரை மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு ஆகியோர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேற்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட எதிரிகளை கண்டறிய CCTV கேமராக்களின் பதிவுகள் உறுதுணையாக இருந்தது. மேலும் காவல் ஆணையர் அவர்கள் CCTV கேமராக்களின் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி அறிவுறித்தி,மாநகர காவல் அதிகாரிகளை பொது மக்களின் ஒத்துழைப்புடன் பொது இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பொருத்துவதற்கு அறிவுரை வழங்கி வருவதன் பேரில் மதுரை மாநகரில் இது வரை பனிரென்டாயிரத்திற்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டும் அவற்றில் போதுமான கேமராக்கள் சாலைகளை கண்காணிக்கும் விதத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பொருட்டு பொது மக்கள் தங்களது வசிப்பிடங்கள் மற்றும் தங்களது வணிக நிறுவன வளாகங்களில் CCTV கேமராக்களை பொருத்தி சமூக விரோத மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகளை கட்டுப்டுத்த உதவுமாறு மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அவர்கள் கேட்டுக்கொள்ளுகிறார்கள்.