மதுரை பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற மதுரை கிளை
பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது.
பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது.
மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மாணவிகள் மனரீதியாக, உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர். இதை தடுக்க நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் முறையாக செயல்பட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கலாசாரம், தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் சில தீமைகள் ஏற்படுகின்றன. இதில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். இது கவனிக்கப்படாமல் உள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றது. எனவே கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வசதியாக பாடப்புத்தகங்களில் ‘14417’ என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அவர்களுக்கு உதவ ஒரு குழுவும் செயல்படுகிறது என சமீபத்தில் அரசு அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அதே சமயம் பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாத விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது. புகார் அளிக்க வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் குற்றங்களை தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி அவற்றை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறையை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதற்காக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.