ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். வ.உ.சி. ரெயில்வே பாலத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கரிமேடு, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பூபதி மனைவி அழகம்மாள் (46), களத்துபொட்டல், நேரு நகர் உதயகுமார் (36) என்பது தெரிய வந்தது.
அழகம்மாளின் கணவர் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு இவருக்கு களத்துப்பொட்டல் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, மாநகரம் முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும்எ கைது செய்தனர்.