கடற்கரைச் சாலையில் தூக்கக் கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை புதுப்பேட்டையில் வசிப்பவர் பால் செல்வம்(26). 8-வது பட்டாலியன் ஆயுதப்படையில் காவலராக உள்ளார். நேற்றிரவு கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பால் செல்வமும் சக போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
இரவு 12-30 மணி அளவில் பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது. அதை பால் செல்வம் நிறுத்துவதற்காக கையைக்காட்டி சாலையில் சற்று முன்னால் வந்துள்ளார்.
ஆனால் வேன் ஓட்டுநர் அப்போதுதான் பால் செல்வத்தை கவனித்தவர் அவர் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தும் வேன் நிற்காமல் கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்த தடுப்பு மீது மோதியது.
தடுப்பு பால் செல்வத்தின் மீது பலமாக மோதவே அவர் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. அடிபட்ட அவரை ஒரு காரில் ஏற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சக போலீஸார் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து தற்போது உள் நோயாளியாக சிகிச்சையில் உள்ளார்.
மோதிய வேனை ஓட்டிவந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் விஜயன் (30) நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கிறார். கந்தன் சாவடியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை வீட்டில் வீடும் ஒப்பந்த பணியை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
நேற்றிரவு கம்பெனியில் வேலை பார்த்தவர்களை திருவெற்றியூரில் விட்டு, விட்டு அங்கிருந்த ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் இரண்டு வாகன ஓட்டுநர்களை அழைத்துக் கொண்டு கந்தன் சாவடிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வாகனச்சோதனை நடைபெற்ற உழைப்பாளர் சிலை அருகே வரும்போது சற்று கண்ணயர்ந்துள்ளார்.
போலீஸார் மடக்கும்போதுதான் ஆள் குறுக்கே வந்தது தெரிந்து பிரேக்கை அழுத்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ச.அரவிந்த்சாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.