சங்கரன்கோவில் அருகே சீட்டு விளையாட்டை தடுத்த போலீசாருக்கு அடி-உதை- 8 பேர் கும்பல் கைது
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் சப்- இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உடப்பன்குளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சீட்டு விளையாடிய வர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு தினேஷ் மற்றும் சங்கர பாண்டி ஆகியோரை அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அவதூறாக பேசியதுடன் பணி செய்ய விடாமல் அடித்து உதைத்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விரைந்து வந்த கூடுதல் போலீஸ் படையினர் தாக்குதல் நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது சொக்கம்ப ட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, சங்கரன்கோவிலை சேர்ந்த கலைச்செல்வன், ராமநாத புரத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன், சிங்கிலிப்பட்டியை சேர்ந்த சுப்பையா பாண்டி, சுந்தரன்கோவில் சேர்ந்த ஆனந்தன், தேவர் குளத்தை சேர்ந்த மாரிராசு, சங்கரன்கோவில் பிச்சை, ராமசாமி பாண்டியன் ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், 4 ½ லட்சம் பணம், 8 செல்போன்கள் 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.