தமிழகம் முழுவதும் 19,654 செல்போன் எண்கள் முடக்கம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
தமிழகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் செல்போன் எண்கள் மூலமே நடைபெறுகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் வங்கி ஆவணங்கள், ஆதார், பான் எண் தகவல்களை பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு கேட்டு பெறுகின்றனர்.
இவ்வாறான தகவல்களை கேட்டு வரும் செல்போன் எண் அழைப்புகள் பெரும்பாலும், மோசடி செய்பவர்கள் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள பயன்படுத்துவது.
உள்துறை அமைச்சகம்: எனவே, மோசடி மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடும் செல்போன் எண்களை முடக்க உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் இணையதளத்தில், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை முடக்குவதற்கான கோரிக்கையை எழுப்புவதற்காக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதில், சைபர் குற்றத்தில் ஈடுபடும் செல்போண் எண்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்த்த பிறகு, அந்த செல்போன் எண் முடக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில், இதுவரை 20,197 செல்போன் எண்கள் முடக்குவதற்காக கோரிக்கையுடன் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான செல்போன் எண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சைபர் க்ரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.