தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் – போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை
தமிழக-கேரள எல்லையில் மிக முக்கிய பகுதியாக செங்கோட்டை நகராட்சி விளங்கி வருகிறது. இந்த வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை ஆயிரக்க ணக்கான வாகனங்களில் இரவு, பகலாக சென்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்-சாண்ட் மணல், ஜல்லி கற்கள் என அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 2 மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைகிறது.
இதனை சரிசெய்ய போலீசார் போராடி வரும் நிலையில் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகளை சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.