பாலக்கோடு பி .டி.ஓ.அலுவலக வளாகத்தில் உழவர் சந்தை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி இன்று நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சுத்தமாகவும், புதியதாகவும் சுகாதாரமான வகையில் நுகர்வோரை சென்றடையவும், உழவர் சந்தை மேம்படவும் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை& வேளாண்மை வணிகதுறை சார்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்படும் சுத்தமான மற்றும் புதிய, பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தை என்ற சான்றிதழ் அனைத்து உழவர் சந்தைகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு தர்மபுரி உழவர் சந்தைக்கு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு உழவர் சந்தை பெற, பாலக்கோடு உழவர் சந்தை விவசாய விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் வரவேற்புரையுடன், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன் மற்றும் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் திரு.செல்வம் அவர்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு மேற்பார்யாளர் அடிப்படை பயிற்சி உழவர் சந்தை விவசாய விற்பனையாளர்களுக்கு நடைபெற்றது.
நியமன அலுவலர் டாக்டர்.பானுசுஜாதா அவர்கள் தன்னுடைய உரையில் பயிற்சியின் நோக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள், சான்றிதழ் மற்றும் ஒவ்வொரு உணவு வணிகர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்துடன், பயிற்சியில் தெரிந்து கொள்ளும் விஷயங்களை உள்வாங்கி செயல்படுத்திட கேட்டுக்கொண்டார்.
இந்திய உணவு பாதுகாப்பு துறை ஆணையம் அங்கீகாரம் பெற்ற மிஸ்டர், தனியார் பயிற்சி பாட்னரின் பயிற்சியாளர் திரு. ஷெரீப் , உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சியில் விவசாய விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள், நடைமுறைகள், தரங்கள் குறித்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் தரமாக கொள்முதல் செய்தல், பாதுகாப்பாக விற்பனை செய்தல், தரம் பிரிப்பது, காய்கறி பழங்கள் வைக்கும் இடங்களை சுகாதாரமாக பராமரிப்பது, பழைய சாக்கு, உர மூட்டை சாக்குகள் பயன்படுத்தாமல் தவிர்ப்பது, மீதமாகும் காய்கறிகளை பராமரித்தல், இருப்பு வைத்தல், கையாளுதல் , பொருள்மேலாண்மை குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார்.
ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உணவுப் பொருட்களில் காணப்படும் கலப்படம் கண்டறிதல் சார்ந்து தேன், தேயிலை, மிளகு, மஞ்சள் தூள், நெய் போன்றவற்றில் கலப்படம் கண்டறிதல் செயல்முறை விளக்கம் அளித்ததுடன், உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி எடை,விலை, நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிம எண் கவனித்து வாங்க கேட்டுக் கொண்டார். வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட உழவர் சந்தை விற்பனையாளர்கள் மற்றும் பாலக்கோடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) இந்துமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம், காரிமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் திருமதி. சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . பாலக்கோடு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் செல்வம், நன்றி உரையாற்றினார்.