சிதம்பரம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த கணவன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சிலம்பரசன் (வயது 35). துபாயில் பணி செய்து திரும்பியவர். இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் அரசூரை சேர்ந்த கந்தசாமி மகள் ரோஜாவிற்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி திருமணமானது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்தது. இந்நிலையில் நேற்று சிலம்பரசனுக்கும், ரோஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் வீட்டிலிருந்த பிளேடை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரோஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அப்போது ரத்தவெள்ளத்தில் ரோஜா இறந்து கிடந்தார். அங்கிருந்து வெளியேறிய சிலம்பரசன் கிள்ளை போலீஸ் நிலையம் சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். தொடர்ந்து கீழ் அனுகம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்ற கிள்ளை போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருமணமாகி 2 மாதமே ஆனதால், சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.
இதையடுத்து சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ரோஜாவின் கணவர் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ரோஜாவிற்கும், சிலம்பரசனுக்கும் திருமணமாகி 2 மாதம் ஆகிறது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரோஜா 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. திருமணம் ஆவதற்கு முன்பே ரோஜா கருவுற்றுள்ளார். இது குறித்து ரோஜாவிடம் சிலம்பரசன் கேட்டுள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. திருமணமாவதற்கு முன்பே கருவுற்றதை கூறாமல் மறைத்ததால் சிலம்பரசன் ஆத்திரமடைந்தார். ரோஜாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலம்பரசன், அவரது கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.