அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து
கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.
அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்