`அத்தனை மதுபாட்டில்களும் வாக்காளர்களுக்குத்தான்!’ -போலீஸைத் திணறவைத்த அ.தி.மு.க வேட்பாளரின் கணவர்தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு வாக்களிக்க உள்ளவர்களுக்கு முத்துவேல் மதுபாட்டில் விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்களத்தூர் ஊராட்சியில் கீழகன்னிச்சேரி, தட்டனேந்தல், பருக்கைக்குடி, பருத்திக்குளம், வெண்ணீர்வாய்க்கால், விளங்களத்தூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. விளங்களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குக் கனகவள்ளி என்பவர் போட்டியிடுகிறார். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க முதுகுளத்தூர் கிளை நிர்வாகியாக உள்ள முத்துவேல் என்பவரின் மனைவி.இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு வாக்களிக்க உள்ள ஆதரவாளர்களுக்கு முத்துவேல் மதுபாட்டில்களை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.மேலும் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக தனது ஆதரவாளரான அ.தி.மு.க பிரமுகர் முத்துமணி என்பவரை மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதற்காக காக்கூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் ரூ.1,10,000 மதிப்பிலான 957 மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் கொண்டு வந்துள்ளார் முத்துமணி.இதுகுறித்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்குக் கிடைத்தது. இதையடுத்து முதுகுளத்தூர் டி.எஸ்.பி ராஜேஸ் உத்தரவின்படி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீஸார் புளியங்குடி அருகே வந்த ஆட்டோ ஒன்றைச் சோதனை செய்தனர்.இந்தச் சோதனையில் ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 957 மதுபாட்டில்கள் சிக்கின. இதையடுத்து ஆட்டோ டிரைவர் பாலுச்சாமி, அ.தி.மு.க பிரமுகர் முத்துமணி உள்ளிட்டோரைப் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்