கடலூர்: குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்ட`ஸ்கெட்ச்’ – கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் – மேல வன்னியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், விபத்தில் அடிப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, குமராட்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.
அதில் சடலமாகக் கிடந்தவர், மேல வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மாமல்லன் என்பதும், அவர் நெடும்பூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக டேங்க் ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான மாமல்லனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
விபத்து குறித்த தகவலைக் கேட்டு வந்த மாமல்லனின் சகோதரர்கள், தங்கள் அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்த அதிகமான ரத்தப்போக்கையும், மாமல்லனின் பின் தலையில் இருந்த பலமான காயத்தைப் பார்த்தும் கையைப் பிசைந்து கொண்டிருந்த போலீஸார், அவர்கள் கூறிய புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.
அதையடுத்து மாமல்லனின் சகோதரர் இளமதி கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து டி.எஸ்.பி ரூபன் குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, மாமல்லனின் மனைவி, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது மாமல்லனின் மனைவி அளித்த பதில்கள் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதனால் அவரிடம் மட்டும் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, குவைத்திலிருந்து காதலன் போட்டுக் கொடுத்த திட்டப்படி, அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கணவனைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.