Police Department News

சென்னையில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணடைந்த குற்றவாளிகள்!

சென்னையில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணடைந்த குற்றவாளிகள்!

சென்னையை அடுத்த வண்டலூரில் தி.மு.க பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த நான்கு பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன்.
இவர் தி.மு.க காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்தார்.

மேலும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார்.

முன்னதாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆராவமுதன் பொறுப்பு வகித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலத்தையடுத்து படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்த பணிகளை பார்வையிடுவதற்காக இரவில், ஆராவமுதன் தனது காரில் வந்துள்ளார்.

அப்போது அங்கு வேறொரு காரில் வந்து இறங்கிய அடையாளம் தெரியாத 4 நபர்கள் ஆராவமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடிக்குண்டை வீசி தாக்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராவமுதனை, அந்தக் கும்பல் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவந்தனர்.

இந்தநிலையில், ஆராவமுதன் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கனகராஜ், அருண் ராஜ், நவநீத கிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 ல் இன்று சரணடைந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ராஜேஷ்கண்ணா, 4 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.