ஏ.ஆர்.டி. நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் கைது
ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கு விவகாரத்தில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த பெண் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை முகப்பேரில் இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் சேமிப்பு திட்டத்தை தொடங்கியது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. எனவே, மக்கள் போட்டி போட்டு பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் இந்த ஜூவல்லரியின் உரிமையாளர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.
பணத்தை பறிகொடுத்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து! போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த ஜூவல்லரியின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகிய 2 பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு பொதுமக்களை இந்த திட்டத்தில் சேர்த்துவிட்ட பிரியா, ஜவகர், தேவராஜ், ஆசிக் அலாவுதீன் உட்பட 8 ஏஜெண்டுகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் தோழியும், மோசடி திட்டங்களை வகுத்து கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படும லீமா ரோஸ் என்ற பெண்ணை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது