தமிழக காவல் துறையில் கிரைம், கிரிமினல் டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம் (சிசிடிஎன்எஸ் ) என்கிற திட்டத்தின் கீழ் பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் இறந்தவரின் உடலை விரைவில் அடையாளம் கண்டுபிடிக்க போலீஸாருக்கு உதவும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படும் எப்ஐஆர், தொடர் நடவடிக்கை, கைதானவரின் ரேகை பதிவு உட்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்கும் சிசிடிஎன்எஸ் என்கிற தகவல்களை ஒருங்கிணைக்கும் ஆன்லைன் திட்டம் செயல்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவுக்கான ரசீது, எப்ஐஆர் விவரங்கள் அந்தந்த காவல் நிலையங்கள் மூலம் ஆன்லைனில் உடனுக்குடன் பதிவு செய்கின்றனர். எப்ஐஆர் கிரைம் எண் மூலம் தேவைப்படும் விவரங்களை காவல் அதிகாரிகள் ஆன்லைனில் பார்க்கும் வசதி உள்ளது.
காவல் நிலையத்தில் அன்றாடம் பதிவாகும் விவரங்களை ஒருங்கிணைக்கும் சிசிடிஎன்எஸ் அலுவலகம் ஒவ்வொரு மாவட்ட, மாநகர் காவல் எல்லையில் செயல்படுகிறது. தற்போது சிசிடிஎன்எஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு சூழலில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடப்பவரை விரைவில் கண்டறிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வகையில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அள வில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தால் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடப்பவர்களை விரைந்து கண்டுபிடிக்க இவ்வசதி உதவுகிறது என சிசிடிஎன்எஸ் பிரிவு போலீஸார் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:
காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அனைத்து காவல் நிலையங்களில் பதிவாகும் எப்ஐஆர் விவரங்களை ஒருங்கிணைக்க சிசிடிஎன்எஸ் என்ற வலைப்பின்னல் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று இறந்து கிடப்பவர்களை பற்றிய விவரங்களை அறிய தற்போது புது வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறந்த உடல்களை மீட்கும் போலீஸார், அவர்கள் அணிந்திருக்கும் ஆடை, அங்க அடையாளம், உயரம், வயது போன்ற பல்வேறு தகவல் களுடன் எப்ஐஆர் பதிவு செய்கின்றனர். இத்தகவல்களை சிசிடிஎன்எஸ் ஆன்லைனில் ஒருங்கிணைக்கும்போது, தமிழக அளவில் காணாமல் போனவர்களின் விவரங்கள் தெரியும். இதன் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்.
கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடப்பவர் குறித்த தகவலும், மாயமான சிலரின் தகவலும் ஒரே மாதிரியாக இருந்து குழப்பம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் அழைத்து அடையாளம் காணப்படுகிறது. இப்புதிய வசதியின் மூலம் சென்னை, தேனி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் முகவரியின்றி இறந்து கிடந்த சில உடல்கள் அண்மையில் விரைவாக கண்டறிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மானாமதுரை தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அப்போது இந்த புதிய வசதி மூலம் அவர் உடனே அடையாளம் காணப்பட்டார்.
இத்திட்டம் மூலம் போலீஸாருக்கு வீண் அலைச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு, இறந்தவர்களின் உடல்களை குறிப்பிட்ட நாட்கள் வரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்திருக்க வேண்டியது தவிர்க்கப்படும் என்றார்.