கொள்ளையர்களின் தாக்குதலால் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் லாவண்யா ஜனத் (30). ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் பணி முடிந்து கடந்த 13-ம் தேதி இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் உள்ள அரசன் காலனி என்ற இடத்தில் சென்றபோது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் இவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னர் அவர் அணிந்து இருந்த தங்க நகை, மடிக்கணினி, பணம், 2 செல்போன்கள் மற்றும் லாவண்யா ஓட்டிவந்த ஸ்கூட்டரைக் கொள்ளையடித்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று லாவண்யாவை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
7 தனிப்படைகள்
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் முத்துசாமி மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் லாவண்யாவின் ஸ்கூட்டரை கடந்த 15-ம் தேதி செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே மீட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதிகளில் இருந்த 8 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தினர். பழைய குற்றவாளிகள், ஜாமீனில் வந்த குற்றவாளிகள், உள்ளூர் குற்றவாளிகள் ஆகியோரிடம் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதே போல் செல்போன் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீஸார் உதவியுடனும் தேடிவந்தனர்.
செல்போன், கத்தி பறிமுதல்
இந்நிலையில் கொள்ளை தொடர்பாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நாராயணமூர்த்தி (19), விநாயக மூர்த்தி (20), லோகேஷ் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன், கத்தி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலில் காயம் அடைந்து பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை நேரில் சென்று நலம் விசாரித்தார். தேவை யான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
லாவண்யா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தகவல் அறிந்த ஆந்திர அரசு அவருக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. ஆனால் இந்தச் சூழ்நிலையில் உதவிகள் தேவைப்படவில்லை. மருத்துவ செலவுகளை லாவண்யா வேலை பார்த்த நிறுவனம் ஏற்று கொண்டது. அவர் உடல்நலம் தேறி உள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சென்னை போலீஸாருக்கு நன்றி என லாவண்யாவின் தங்கை நாரிஷா கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்ப முயன்றபோது காயம்
வழிப்பறி செய்யும் முன் லாவண்யாவைத் தாக்கிய வழக்கில் கைதான 3 பேரில் ஒருவரான விநாயகம், போலீஸார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது மாடியில் இருந்து விழுந்து அவரின் கை, கால் உடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.