விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர், இ.கா.ப அவர்கள் 24.06.2021 அன்று விருதுநகர் சூழக்கரையில் அமைந்துள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள காவலர்களின் குடியிருப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு காவல்துறையின் காவலர் அங்காடி ஆகியவற்றை பார்வையிட்டார். பின் காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் காவல்துறை அங்காடியின் சேவைகளை ஆய்வு செய்தார்.
பின் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் ஓய்வு அறையையும் பார்வையிட்டு, அவர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள தொலைக்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேற்படி ஆய்வின்போது ஆயுதப்படை அதிகாரிகளிடம் காவலர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து அவற்றை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்த குறைகள் இருந்தாலும் தனக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆயுதப்படை விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய அங்கமாகும். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். ஆயுதப்படை காவலர்கள் உங்களது ஓய்வு நேரத்தை நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற நல்ல வழிகளில் செலவிட வேண்டும். பொதுமக்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவக்குமார், காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமரன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.