
புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த சார்பு ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள்.
சிவகாசியில் தொலைந்துபோன சைக்கிளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (57). அப்பளம் விற்பனை செய்து வரும் ஏழ்மையான நிலையை கொண்ட இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அப்பள விற்பனைக்கு சென்றபோது சைக்கிள் தொலைந்து விட்டது.
இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வந்த பாக்யலட்சுமி தனது சைக்கிளை கண்டுபிடித்து தரக்கோரி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், பெண்ணின் ஏழ்மையான நிலையை கருத்தில் கொண்டு தனது சொந்த செலவில் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
புகார் அளிக்க வந்த ஏழ்மையான பெண்ணிற்கு கருணை உள்ளத்தோடு உதவிக்கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
