
தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற 31-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும், நோய் பரவல் தொடர்வதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுதினம் காலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அறிவிப்பு, கொரோனா நோயை முற்றிலும் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு வருமறு:-
தொற்று நிலையை கண்காணித்து, தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருப்பதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற (ஜூலை) 31-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
தொடரும் தடைகள் விவரம் வருமாறு:-
புதுச்சேரி தவிர்த்து, மற்ற மாநிலங்கள் இடையே, தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்து கிடையாது
மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள, வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து இல்லை
திரையரங்குகள்
திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது
சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் கூடாது
பள்ளிகள், கல்லுாரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படாது
திருமண நிகழ்வுகளில், 50 பேர்; இறுதி சடங்குகளில், 20 பேர் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
