தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கி சூடு
தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த ஜூலை 1ம் தேதி கம்பம் மேற்கு வனசரக தமிழக வனப்பகுதியில் கேரள மாநிலத்தை சேரந்த வேட்டைக்காரர்கள் 5 பேர் ஆயுதங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடி, கேரளத்துக்குள் எடுத்து செல்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்திற்குள் சென்ற தமிழக வனத் துறையினரை அங்கிருந்த 5 பேர் கொண்ட கேரள வேட்டையர்கள் துப்பாக்கி மற்றும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினர், கூடலூர் தெற்கு காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வனப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வனத்துறையினரை துப்பாக்கியால் சுட்ட 5 பேர் கொண்ட கும்பலில் இருந்த ஒரு இளைஞரை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், குமுளி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அதன் பிறகு கூடலூர் தெற்கு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளைஞர் இடுக்கி மாவட்டம் முருக்கடி அருகே உள்ள குழிப்பாலையை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் சோஜன் (34) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் சோஜனை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
