
ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல் தேனியில் நால்வர் கைது
தேனியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 48 குட்கா, புகையிலை மூடைகள் பறிமுதல் செய்து மாஜி போலீஸ்காரர் பிரசன்னா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அரண்மனைப்புதுாரை சேர்ந்த கண்ணன் 25, டூவீலரில் மூடையுடன் சென்றார். பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனையிட்டதில் தடை செய்த குட்கா, புகையிலை இருந்தன. அவரை கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த 4 மூடைகளை கைப்பற்றினர்.
மேலும் ஒக்கரைபட்டியில் சீனிவாசன் 52, கோழிப்பண்ணை கோடவுனில் குற்ற வழக்கில் கைதாகி கட்டாய ஓய்வில் சென்ற மாஜி போலீஸ்காரர் பிரசன்னா 40, தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த வியாபாரி நவரத்தின வேல் 42 ஆகியோர் குட்கா, புகையிலை 44 மூடைகள் பதுக்கியதை கைப்பற்றினர்.
இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.நால்வரையும் டி.எஸ்.பி., முத்துராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
