மதுரையில் குழந்தையுடன் தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருடைய கணவர் கார்த்திக் பாண்டியன். இவர்களுக்கு ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் திலகவதி நாராயணபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
கணவர் கார்த்திக் பாண்டியன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாததால் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த திலகவதி தனது ஒரு வயது ஆண் குழந்தையை தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமர்ந்து கையில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தெப்பக்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர்களான செந்தில் மற்றும் வெங்கடேஷ்பாபு ஆகியோர் ஓடிச்சென்று திலகவதி மற்றும் பெண் குழந்தையை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர். மேலும் திலகவதி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதை அறிந்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது துரிதமாக செயல்பட்டு தற்கொலையை தடுத்து நிறுத்தி, இருவரின் உயிரை மீட்ட காவலர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
