நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களில் 5 கொலைகள்
களக்காடு, அம்பை, பாளையிலும் தலா ஒரு கொலை நடந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் அடுத்தடுத்து தலை துண்டித்து 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இது தவிர களக்காடு, அம்பை, பாளையிலும் நேற்று தலா ஒரு கொலை நடந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட் டுள்ளார். இதனால் தென்மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சாதிய மோதல்களை தடுத்து நிறுத்த உயர் போலீஸ் அதிகாரிகள் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தென் மண்டல ஐ.ஜி. அன்பு உடனடியாக நெல்லை வந்தார்.
நேற்று அவர் முன்னீர் பள்ளம் பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோரும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் முன்னீர்பள்ளம் பகுதியில் மேலும் மோதல்கள் நடக்காதவாறு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுத்தமல்லி, கோபாலசமுத்திரம், மேலச் செவல், முன்னீர்பள்ளம், கருங்குளம், பேட்டை கிய பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மோதல்களை உருவாக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டுள்ளார்.
தென்மாவட்டங்களில் இது போன்று சம்பவம் தொடர்ந்து நடக்காதபடி தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐ.ஜி. அன்பு தலைமையில் தென் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. அதில் சாதிய மோதல்களை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
