
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 24.09.2021 அன்று இரவு விடிய, விடிய தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 28 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 11 அரிவாள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் கொலை, கொள்ளை, திருட்டு என 16 வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடியான எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டு நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிசெல்வம் (26) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 84 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அந்நிய நபர்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா எனவும் சோதனையிடப்பட்டும், அனைத்து காவல் நிலைய வாகன எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு கஞ்சா போன்ற போதைப்பொருள் உட்பட சட்டவிரோதமாக எதுவும் கடத்தப்படுகிறதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இதில் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
23.09.2021 அன்று நடைபெற்ற தீவிர ரோந்தில் 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது. அதே போன்று தீவிர வாகன சோதனையில் 1550 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிர ரோந்து ப்பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
