காரியாபட்டி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியற்களுக்கு காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர் பாலியல் போன்ற பிரச்சனை சம்பவம் நடந்தாலோ, பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. குழந்தை திருமண தடை சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆசிரியர்கள் பொன்ராம், முத்துச்சாமி, குருசாமி, காரியாபட்டி குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
