ராஜீவ் காந்தி படுகொலையில் சிதறிய தொப்பி:-நீதிமன்றம் மூலம் பெற்ற காவல் அலுவலர்!
ராஜீவ் காந்தி படுகொலையில் சிதறிய தொப்பி:-நீதிமன்றம் மூலம் பெற்ற காவல் அலுவலர்!
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் பிலிப், தமிழ்நாடு காவல்துறையில் ஏ.எஸ்.பி.யாக இணைந்து படிப்படியாக உயர்ந்து டி.ஜி.பி. ஆனார். இந்நிலையில் அவர் கடந்த ஒன்றாம் தேதி பணி ஓய்வு பெற்றார்.சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
அதில் தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப.அவர்கள் கலந்துக் கொண்டார்.
ஒரு ஐ.பி.எஸ். அலுவலர் ஒய்வு பெறும் போது மற்றவர்கள் வாழ்த்துவது வழக்கமான ஒன்று தான்.
ஆனால் இந்த விழாவில் கவனத்தை ஈர்க்கும் சம்பவங்கள் சில நடைபெற்றன.
அதில் முக்கியமானது ஒய்வு பெறும் பிரதீப் பிலிப் அவர்களின் 1991 ஆம் ஆண்டைய தொப்பி.
காரனம் என்ன?
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அங்கு ஏ.எஸ்.பி.யாக இருந்தவர் தான் பிரதீப் பிலிப், அந்த வெடிகுண்டு சம்பவத்தில் சிக்கி அவரும் பலத்த காயமுற்று 21 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
குண்டு வெடிப்புத் துகள்கள் இன்னமும் அவரது உடலில் ஆங்காங்கே உள்ளன.
இந்நிலையில் அந்த மோசமான வெடிகுண்டு தாக்குதலில் அவரது தொப்பி சிதறியது. பின்னர் அது நீதிமன்ற வழக்கு சொத்து ஆவணமாக ஆனது.
அப்படியிருக்க பணிநிறைவு தின நாளில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த தொப்பியையும் பேட்ஜையும் அணிய வேண்டும் என பிரதீப் பிலிப், ஆசைப்பட்டார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கின் இறுதி உத்தரவு 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தனை ஆண்டு காலமும் அவர் காத்திருந்தார். பணி நிறைவின்போது அந்த பேட்ஜையும் தொப்பியையும் அணிய வேண்டும் என பெரிதும் விரும்பினார்.
அதற்காக முயன்றார், அது பலனளிக்கவில்லை. எனவே அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள அனுமதியளிக்குமாறு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முடிவில், ஒரு மாத காலம் அந்தத் தொப்பியையும் பேட்ஜையும் பிரதீப் பிலிப், வைத்துக் கொள்ள நீதிமன்றம் இடைக்கால அனுமதியளித்தது. இதற்காக ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகையையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனாலும் கூட “பிரிவு உபசார விழாவில் அந்தத் தொப்பியை அவர் அணிய இயலவில்லை. ஏனெனில் “அது ஏ.எஸ்.பி பதவிக்கான தொப்பி. பதவி ஓய்வு பெறும்போது டி.ஜி.பி அந்தஸ்தில் அவர் இருந்தார். காவல் யூனிஃபார்மும் மாறிவிட்டது. அதனால்தான் 1991 ஆம் ஆண்டைய தொப்பியையும், பேட்ச்சையும் அணிய இயலவில்லை.
இருந்தாலும் பணி நிறைவு விழாவில் நீதிமன்ற பரோலில் வந்த தொப்பியும் பேட்சும் முக்கிய பேசும் பொருளாகவே இருந்தது.