
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 161 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் சந்தியாவு (65) என்பவர் கடந்த 23.09.2021 அன்று 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி சந்தியாவுவை கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான சந்தியாவு மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா அவர்கள் பரிந்து செய்தார்கள்
கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவை சேர்ந்த கொம்பையா மகன் மகராஜன் (40) என்பவர் கடந்த 29.09.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி தியேட்டர் ரோடு பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து எதிரி மகராஜன் என்பவரை கைது செய்தனர். மேற்படி எதிரி மகராஜன் என்பவர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 16 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டத்தில், ஜங்ஷன் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், டவுன் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கு உட்பட 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் வழக்கின் எதிரியான மேற்படி மகாராஜன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் சாயர்புரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் 1) சந்தியாவு மற்றும் கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவை சேர்ந்த கொம்பையா மகன் 2) மகராஜன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை 161 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
