
ஓடும் ஆட்டோவில் பணம் திருடிய 2 பெண்கள் கைது
மதுரையில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகம் உள்ளது. இதனை போலீசார் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரையில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படை போலீசார் தல்லாகுளம் பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது மதுரை பி.பி.குளம் பஸ் நிறுத்தத்தில் ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்த ஒரு பெண், ‘என் மணிபர்சை காணவில்லை’ என்று கூறினார்.
இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர் மதுரை குலமங்கலம், மஞ்சமலை நகர் பச்சமுத்து மனைவி ஆறுமுகம் (வயது 54) என்று தெரியவந்தது. அவர் கருங்காலக்குடியில் உள்ள வங்கியில் மாட்டு லோனுக்கு உரிய தவணைத் தொகையை செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.1,300 ரொக்கத்தை பர்சில் வைத்திருந்தார்.
அதனை அவருடன் ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் திருடிருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன்பேரில் ஆட்டோவில் வந்த 2 பெண்களிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெண்ணிடம் ஆறுமுகத்தின் மணி பர்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் மதுரை மேலூர் மில்கேட், சிங்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த பகவதி மனைவி ருக்மணி (50), ஆத்திகுளம் மாயன் மனைவி வேணி (57) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மணி பர்ஸ் திருடியதாக 2 பெண்களையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்
