

ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்…..பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..!
மதுரை, தேனி மாவட்டம் சின்னமனூரில் ஒரு மர்ம கும்பல் போதை மருந்துகளை பஸ்சில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஷேக்அபுதாகீர் மகன் முகமதுமீரான் (வயது 22), அழகுமுத்து மகன் மாணிக்கம் (19) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மருத்துவர் பரிந்துரை பேரில் உட்கொள்ளும் ஊக்க மருந்தை, அந்த கும்பல் போதை ஊசியாக பயன்படுத்தி, அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு சின்னமனூர் தங்கேஸ்வரன் மற்றும் காமாட்சிபுரம் சரவணக்குமார் ஆகியோர் உதவியாக இருந்து வந்துள்ளனர். மேற்கண்ட 2 பேர் மூலம் முகமதுமீரான், மாணிக்கத்துக்கு திருச்சி கருமண்டபம் பார்மசி உரிமையாளர் ஜோனத்தன்மார்க் (30) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவரிடம் இருந்து மேற்கண்ட மருந்துகளை, இந்த கும்பல் கொள்முதல் செய்து உள்ளது. இதற்கான பணத்தை அவர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோனத்தன்மார்க் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி, பஸ்சில் மேற்கண்ட ஊக்க மருந்தை உரிய அனுமதியின்றி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளிடம் 11 ஊக்கமருந்து பாட்டில்கள், ஊசிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பொறியியல் பட்டதாரியான ஜோனத்தன்மார்க், திருச்சியில் தனியார் பார்மசி நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் மூலம் அவர் மதுரையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து ‘கிரீன’ என்ற ரகசிய குறியீடு மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்து உள்ளார். அடுத்தபடியாக ‘பிங்க்’ குறியீடு மூலம் சென்னையிலும், ‘ஆரஞ்சு’ குறியீடு மூலம் புனேயிலும் ஊக்க மருந்துகள் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. அதன் பிறகு மேற்கண்ட மருந்துகளை போதை ஊசியாக உருமாற்றிய இந்த கும்பல் சென்னை, ஒசூர், தேனி, கோவை, திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஏஜென்ட் மூலம் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இது தவிர கேரளாவில் பாலக்காடு, திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய பகுதிகளுக்கும், டீலர் மூலம் போதை மருந்துகள் சப்ளை செய்யப்பட்டு உள்ளன. புதுச்சேரி மாநிலத்துக்கும் பெட்டி பெட்டியாக போதை ஊசிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஜோனத்தன்மார்க் என்பவரின் திருச்சி பார்மசி அலுவலக நிர்வாகத்தை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பாலுச்சாமி என்பவரின் மகள் வினோதினி என்பவர் கவனித்துள்ளார். எனவே அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஜோனத்தன் மார்க்கின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் பேசிய போது, பொதுமக்களின் உடல், மனநலனுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை சட்டத்துக்கு புறம்பாக கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
