



திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் போதையில் ஒருமாதக் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்! – மீட்ட போலீஸ்
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு பிளாட்ஃபார்மில் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த அவர், குழந்தைக்கும் மது ஊற்றிக் கொடுத்து கொண்டிருப்பதாக இளைஞர்கள் சிலர் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தபோது, `குழந்தை பிறந்து 13 நாள்கள் ஆகின்றன. கரூரில் பிறந்தது’ என முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்து உடனடியாக பெண் போலீஸாருக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். அங்கு விரைந்து வந்த பெண் போலீஸார் அந்தப் பெண்ணின் கையிலிருந்து குழந்தையை மீட்டு பார்த்தபோது குழந்தை மயக்கத்தில் இருந்ததை அறிந்தனர்.
மேலும் போதையிலிருந்த அந்தப் பெண் எழுந்திருக்கும்போது மடியிலிருந்து 3 மது பாட்டில்கள் கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க முயன்றபோது அதீத மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அந்தக் குழந்தை சுமார் 2.6 கிலோ கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை என்றும், பிறந்து ஒரு மாதமே இருக்கும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம்
போலீஸார் குழந்தையை மீட்டபோது அந்தப் பெண், `அது என் குழந்தை’ எனச் சொல்லிக் கொண்டே எழுந்து வரும்போது மதுபோதையால் நடக்க முடியாமல் சாலையில் விழுந்து உருண்டு புரண்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார், அந்தக் குழந்தை அவருடையதா, கடத்தப்பட்ட குழந்தையா என்ற கோணத்தில் விசாரித்தனர்
இது குறித்து திண்டுக்கல் வடக்கு நகர் காவல் ஆய்வாளர் உலகநாதனிடம் விசாரித்தோம். “அந்தப் பெண் குழந்தைக்கு மதுக் கொடுக்கவில்லை. ஆனால் அவர் தள்ளாடும் அளவுக்கான மதுபோதையில் இருந்தார். அவரிடம் 3 மதுபாட்டில்கள் இருந்தன. அவரையும் குழந்தையையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம்
விசாரணையில் இவர் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் என்பதும் கணவருடன் கோபித்துக்கொண்டு மது குடித்ததும் தெரிய வந்தது என கூறினார் இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த அந்த பெண் திடீரென மாயமாகி விட்டார் இது குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
