Police Department News

கல்லூரி மாணவரை கத்தி முனையில் கடத்திய மர்ம கும்பல் 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு

கல்லூரி மாணவரை கத்தி முனையில் கடத்திய மர்ம கும்பல் 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு

மதுரை கோரிப்பாளையம் ஓட்டலில் கல்லூரி மாணவர் ஒருவரை 5 பேர் கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்றதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் (பொறுப்பு) ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவம் நடைபெற்ற ஓட்டல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை கைப்பற்றி, அவற்றில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம கும்பல் கத்தி முனையில் கடத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் அடிப்படையில் தனிப்படை போலீசார் அழகர் கோவில் மெயின் ரோட்டில் 5 பேர் கும்பலை பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து அலங்காநல்லூர், மேட்டுப்பட்டியை சேர்ந்த அருணன் (வயது 25) என்ற கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

மேலும் கடத்திச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் அருணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர், நான் கடந்த ஆண்டு கோவை கல்லூரியில் படித்தபோது கிரிப்டோ கரன்சி வணிகம் பற்றி எனக்கு தெரியவந்தது. இதில் ரூ.40 ஆயிரம் முதலீடு செய்தால், வாரந்தோறும் ரூ.2000 வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

எனவே நான் இது தொடர்பாக சக நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தேன். அதன் பிறகு நானும் மற்றும் சிலரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தோம். இந்த நிலையில் நான் மதுரையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து, தற்போது 2-ம் ஆண்டு படித்து வருகிறேன்.

இந்த நிலையில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டதாக எனக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து கோவையில் என்னுடன் படித்த மாணவர்கள் சிலர், நீ சொன்னதால்தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தோம். எனவே நாங்கள் முதலீடு செய்த ரூ.16 லட்சத்தை நீ தான் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதற்கு நான் உடன்படாததால் என்னை கடத்தி சென்று செல்போனை பறித்தனர் என்று தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அருணனிடம் ரூ.16 லட்சம் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி மாணவரை கடத்திய அரவிந்த் குமார் (23), ரிஷிகுமார் (23), கார்த்திகேயன் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தவிர தலைமறைவான பிரசன்னா, ஐஸ் ஆனந்த் ஆகியோரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.