
மதுரை பீபீ குளம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு- மர்மநபர்கள் துணிகரம்
மதுரை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி வெள்ளியம்மாள் (வயது 31). ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு பீ.பி.குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வெள்ளியம்மாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரை பின் தொடர்ந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்மநபர்கள் திடீரென்று வெள்ளியம்மாளை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வெள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை தேடி வருகின்றனர்
