மேலவளவு கொலை வழக்கு: 13 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு ஊராட்சியின் தலைவராக இருந்த முருகேசன் உள்பட 7 பேர் 1997-ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 17 பேரில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து 60 வயதை கடந்த 3 பேரை அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதில் ஒருவர் இறந்துவிட்டார்.
இதனால் இந்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் மட்டும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த 13 பேரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி கடந்த 2019-ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மூத்த வக்கீல் ரத்தினம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல அவர்களை விடுதலை செய்ததற்கு எதிராக, கொலையுண்ட ஊராட்சித்தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் தரப்பிலும் தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, 13 பேரின் விடுதலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
மேலும் விடுதலையான 13 பேரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து சேர்த்தது. இதுதொடர்பாக அவர்களும், தமிழக அரசும் பதில் அளிக்கவும், அவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளனவா? என்பதையும் உறுதிப்படுத்தும்படியும் உத்தரவிட்டது.
மேலும் அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் என்.ஆர். இளங்கோ, திருவடிகுமார் ஆகியோர் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. இவற்றை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் சுந்தர் மோகன் ஆகியோர் கூறினர். அப்போது மேலவளவு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பேரை முன் கூட்டியே விடுதலை செய்து பிறப்பித்த அரசாணையை முறையாக பரிசீலித்து தான் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட தேவையில்லை என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.