
ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா?
மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
நேற்று முன்தினம் மாலை அந்த காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து கருப்பாயூரணி போலீசார் விரைந்து வந்தனர்.
மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மர்மமான முறையில் இறந்து கிடந்த 18 மயில்களை மீட்டனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிதறி கிடந்த நெல்மணிகளை சேகரித்து, அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் அடுத்தடுத்து மீண்டும் மயில்கள் செத்து கிடந்தன. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து சேகரித்தபோது, 22 மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த மயில்களையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 நாட்களில் மொத்தம் 40 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மயில்கள் செத்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் அங்குள்ள விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பற்றி கருப்பாயூரணி போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
